சென்னையில் சிஏஏவுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் மேற்கொண்டுள்ள போராட்டம் 4-ஆவது நாளை எட்டியுள்ளது.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது, பழைய வண்ணாரப்பேட்டையில் கூடி இருந்த போராட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். போலீசாரின் இந்த தாக்குதலில் ஒரு சிலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து., போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலும் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இவ்விவகாரம் மேலும் பெரிதாவதை தடுக்க வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், காவல்துறையினரின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமியர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.
முன்னதாக, போராட்டத்தின்போது காயமடைந்த காவல்துறையினரை ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிஏஏவுக்கு எதிரான போராட்டம் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, ஆர்ப்பாட்டம் நடக்கும் பகுதிக்கு முன்னாள் மத்திய அமைச்சரும் மத்திய சென்னை எம்பியுமான தயாநிதி மாறன், வடசென்னை எம்பி கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், அமமுக வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் சென்று போராட்டக்காரர்களை சந்தித்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து, போலீசாரின் தாக்குதலை கண்டித்தும், சிஏஏவுக்கு எதிராகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்பினர் மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.