மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது - பள்ளிக்கல்வித்துறை
5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வி ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முறை இந்த ஆண்டு முதல் அமல் செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கையால் மாணவர்கள், உளவியல் ரீதியாக பாதிப்படைவார்கள் என கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அப்படி இருந்தும், பொதுத்தேர்வு நடத்தும் முடிவில் இருந்து தமிழக பள்ளிக் கல்வித்துறை பின்வாங்கவில்லை. திட்டமிட்டபடி 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள், அந்தந்த CRC மைய அளவில் உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றி கொடுத்து திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்நடைமுறையால் மாணவர்களின் கற்றல் அடைவுகளை ஒரே மாதிரியாக சோதித்தறியும், நியாயமான மதிப்பீடு செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி அளிக்க இவை ஏதுவாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு தேர்ச்சியை நிறுத்தி வைக்கவேண்டாம் என்று என அரசு ஆணையிட்டுள்ளதால் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் அச்சப்பட வேண்டாமென பள்ளிக்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்துவது என்பது அவர்கள் மீது நடத்தப்படும் உளவியல் தாக்குதல். இந்த நடவடிக்கை என்பது பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கும், மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வருவதை தடுத்துவிடும்.
அதனால், தமிழக அரசு இந்த புதிய நடவடிக்கையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அரசியல் தலைவர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், எதையும் பொருட்படுத்தாத தமிழக அரசு தான் எடுத்த முடிவில் திட்டவட்டமாக இருந்து வருகிறது.