கும்பலாக காப்பியடிக்கும் கல்லூரி மாணவர்கள்
Patna: போதிய இடம் இல்லாததால் கல்லூரி தேர்வு ஒன்று திறந்த வெளியில் நடத்தப்பட்டது. இதனை கூட்டம்கூட்டமாக இருந்து மாணவர்கள் புத்தகத்தை பார்த்து எழுதினர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பீகார் மாநிலம் பாட்னாவில் ராம் லகான் சிங் யாதவ் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 5 ஆயிரம் பேர் படித்து வருகின்றனர். தற்போது அங்கு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக நடைபெறும் வகுப்புகளில் மாணவர்கள் நெருங்கி அமர்ந்திருப்பார்கள். ஆனால் தேர்வு காலங்களில் அவ்வாறு செய்ய முடியாது என்பதால் ஒரு பென்ச்சிற்கு 2 பேர் மட்டுமே அமர அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், வகுப்பறைக்குள் தேர்வு எழுத 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடம் போதுமானதாக இருந்தது. இதையடுத்து மற்ற 3 ஆயிரம் பேர் திறந்த வெளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கல்லூரி மாணவர்கள் கும்பல் கும்பலாக அமர்ந்து கொண்டு புத்தகத்தை பார்த்து காப்பி அடித்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கல்லூரி வளாகத்தில் போதுமான கட்டிடங்கள் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக பலரை அணுகியும் பலன் கிடைக்கவில்லை என்றும் கல்லூரியின் தேர்வு பொறுப்பாளர் ராஜேஸ்வர் பிரசாத் கூறினார்.