This Article is From Sep 27, 2019

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் கைது!!

முன்னதாக ஜெயகோபால் கடந்த 14-ம்தேதி தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் கைது!!

சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Chennai:

பேனர் விழுந்து ஐ.டி. நிறுவன பணியாளர்  சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில், பேனர் வைத்த உள்ளூர் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக அவர் கடந்த 14-ம்தேதி தலைமறைவானார். அவரை பல்வேறு இடங்களில் போலீசார் தனிப்படை அமைத்து தேடிய நிலையில் தற்போது கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சுபஸ்ரீ, கடந்த 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். 

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தன. 

தொடர்ந்து, அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சினிமா நடிகர்களும் தங்களது ரசிகர்களுக்கு பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினர். நடிகர் சூர்யா தனது ரசிகர்கள் யாரும் கட்-அவுட், பேனர்கள் வைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். இதேபோல், நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், பேனர் வைத்த அதிமுக உள்ளூர் பிரமுகர் ஜெயகோபால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கைதாகி உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

.