உயர் நீதிமன்றத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
Chennai: சுபஸ்ரீ மரண வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தங்களுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுபஸ்ரீயின் தந்தை ரவி மனுத்தாக்கல் செய்துள்ளார். பேனர்கள் வைக்கப்படுவதை தடுக்க கடுமையாக சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், தனது மகளின் மரணத்தை சிறப்பு விசாரணைக்குழு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த மாதம் 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுக-வினர் வைத்திருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று திமுக, அதிமுக, அமமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது நிர்வாகிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்தன.
ஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம் பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.
அதே நேரத்தில் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்துக்கு வர உள்ளனர். அவர்களை வரவேற்கும் வகையில் பேனர் வைக்க தமிழக அரசு, நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டது. அதற்கு அனுமதி கொடுத்த நீதிமன்றம், “அரசியல் கட்சிகளுக்குத்தான் பேனர் கட்டுப்பாடு, அரசுக்கு அல்ல” என்று கூறியது. இந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைப்பது குறித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சுபஸ்ரீயின் தந்தை தங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.