இலங்கை பிரதமராக இருந்து வந்த ரணில் விக்கிரம சிங்கே, பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன முன்னிலையில் இந்த பதவியேற்பு நடைபெற்றது.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணியில் ரணில் விக்கிரம சிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம்பெற்றிருந்தது. 2015 பொதுத் தேர்தலில் இந்தக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பெற்றது. இந்த கூட்டணியில் சமீப காலமாக பிளவு ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, ரணில் விக்கிரம சிங்கே பிரதமர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இலங்கை சுதந்திர கட்சியின் கூட்டணி வாபஸ் பெற்றதை அடுத்து உடனடியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பதிவில், எனது நண்பரான ராஜபக்சே இலங்கை பிரதமராகி உள்ளார் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.