This Article is From Mar 27, 2019

முடிவுக்கு வந்த உட்கட்சிப் பூசல்; கார்த்தி சிதம்பரத்தை அணைக்கும் சுதர்சன நாச்சியப்பன்!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தமிழகத்தில் திமுக-வுடன்  கூட்டணி வைத்துள்ளது காங்கிரஸ்

Advertisement
தமிழ்நாடு Written by

சிவகங்கை தொகுதியில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளார். அந்தத் தொகுதியில் செல்வாக்கு பெற்ற இன்னொருவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன். அவர், கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலைநில், தற்போது ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தமிழகத்தில் திமுக-வுடன்  கூட்டணி வைத்துள்ளது காங்கிரஸ். கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த 10-ல் சிவகங்கை தொகுதியும் அடங்கும். மற்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவகங்கை தொகுதி குறித்து முடிவெடுக்க மட்டும் நேரமானது. தொகுதியில் கோலோச்சும் இரண்டு முக்கிய புள்ளிகளான சிதம்பரம் மற்றும் சுதர்சன நாச்சியப்பன் இடையில் சீட் வாங்க பலகட்ட உட்கட்சி வேலைகள் நடந்ததாக சொல்லப்பட்டது. 

ஒரு வழியாக சிவகங்கை தொகுதியில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சுதர்சன நாச்சியப்பன், பொது வெளியில் சிதம்பரம் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் விமர்சனம் செய்தார். 

Advertisement

நேற்று அவர் பேசுகையில், ‘சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு, மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸில் வரும் காலத்தில் ஏற்படப் போகும் பிரச்னைகளுக்கு இது ஒரு காரணமாக அமைந்துவிடுமோ என்று தோன்றுகிறது. என்னை இந்தத் தொகுதியில் நிற்க வைக்காததற்குக் காரணம் சிதம்பரம்தான். அவர் ஆரம்பத்தில் இருந்தே என் வளர்ச்சியைத் தடுத்து வந்தார். நான் காங்கிரஸ் தலைவர் ஆவதையும், அமைச்சர் ஆவதையும் அவர் தடுத்தார். பொறுப்புகள் எனக்குக் கொடுக்கப்படும் என்ற தெரிந்தால், அவர் எதிர்ப்பைக் காட்டுவார்' என்று பொங்கினார்.

ஆனால் இன்று காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருடன் செய்தியாளர்களை சந்தித்த நாச்சியப்பன், ‘ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும். காங்கிரஸ் முழுமையான வெற்றி பெற வேண்டும். சிவகங்கையில் கை சின்னம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஒன்றிணைந்து செயல்பட உள்ளோம்' என்று தடாலடியாக பேசினார்.

Advertisement
Advertisement