பல்வேறு துறையினரும் குழந்தை சுஜித்தை மீட்க கடுமையாக போராடினர்.
Chennai: திருச்சி அருகே கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 82 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, சுஜித்தின் உடல் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, குழந்தை சுஜித்தின் உடல் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்த 25-ம் தேதி மாலை 5.45 மணி அளவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்தில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. முதலில் 26 அடியில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் கயிறு கட்டி குழந்தையை மீட்க முயற்சிக்கும் போது அது தோல்வியில் முடிந்தது. இதில், துரதிர்ஷடவசமாக குழந்தை 26 அடியில் இருந்து வேகமாக கீழே சென்று 70 அடிக்கு சென்று மாட்டிக்கொண்டான்.
இதைத்தொடர்ந்து, வெள்ளக்கிழமை மாலை முதல் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், தன்னார்வலர்கள் என பலர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து குழந்தையை வெளியே கொண்டு வர முயற்சி செய்து வந்தனர். எனினும், அரசு மீது கடும் விமர்சங்கள் வைக்கப்பட்டன. அதாவது, சோதனை முறையிலேயே முக்கியமான நேரத்தை தவறவிட்டது என கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
Sujith Wilson fell into a borewell in Tamil Nadu's Trichy on Friday.
முதலில், மதுரை கோயம்பத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல தன்னார்வல குழுக்கள் ரோபோ மீட்பு சாதனங்கள் மற்றும் முன் அனுபவம் ஆகியவற்றின் துணையுடன் குழந்தையை மீட்க முயன்றனர். இருப்பினும், குழந்தையின் கையில் கயிற்றைக்கட்டி இழுக்க முயற்சித்த போது, ஆழ்துளை கிணற்றின் ஆழத்திற்கு சுஜித் சென்றுவிட்டான்.
இந்த முயற்சிகளுக்கு பின்னரே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மறுநாள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் வேறு ஆழ்துளை கிணறு தோண்டலாம் என சனிக்கிழமை யோசனை செய்யப்பட்டு ஞாயிறுக்கிழமையன்று அதற்கான பணிகள் துவங்கின.
இதுகுறித்து முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் கூறும்போது, விஞ்ஞான அணுகுமுறை இல்லாமல் அரசு அனைத்து கடின முயற்சிகளையும் மேற்கொண்டது. அவர்கள் முதலிலே நன்றாக திட்டமிட்டிருந்தால், சிறுவனை ஆழத்திற்கு செல்ல விடாமல் தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 3 அமைச்சர்கள் முதல் நாளிலிருந்து அந்த இடத்திலையே முகாமிட்டு தீபாவளி தினத்தன்றும் அனைத்து மீட்பு பணிகளையும் மேற்பார்வையிட்டனர். எனினும், இந்த மீட்பு பணிகளையும் அரசியலாக மாற்றி மக்களிடம் ஆதாயம் தேடுவதாக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
குறைந்தது தமிழகத்தில் மட்டும் இதுவரை 10 பேர் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள எந்த ஒரு இயக்க முறையும் இல்லை என நிபணர்கள் சுட்டிகாட்டியுள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் உள்ளூர் அதிகாரிகளால் மிகவும் அபாயகரமான வழியில் கையாளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பல தன்னார்வ குழுக்கள் ரோபோ மீட்பு சாதனங்களை உருவாக்கியிருந்தாலும், எதுவும் அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்படவில்லை.
இதுதொடர்பாக யூனிசெஃப் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "நாங்கள் சந்திராயனை உருவாக்கியுள்ளோம், ஆனால் இதுபோன்ற நிலத்தடியில் விழும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த ஒரு உயிர்காக்கும் தொழில்நுட்பத்தையும் நாங்கள் உருவாக்கவில்லை. நாங்கள் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம், இனி இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்துவதற்கான வழிகளை பின்பற்றுவோம் என்று நம்புகிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளிக்கிழமை முதல் உடனுக்குடன் தகவல் தெரிவித்து வந்த ஊடகங்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. பல ஊடகங்கள் ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையின் கைகள் அசையும் காட்சிகளை வெளியிட்டு காண்போரின் மனதை கணக்க செய்தது. மீட்பு பணிகள் நடைபெறும் அந்த இடம் ஊடகங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்க வேண்டும், அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஊடகங்களுக்கு விளக்கமளித்திருக்க வேண்டும், என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கருத்து கூறியுள்ளார்.