This Article is From Dec 05, 2018

சூரிய சக்தி நினைத்தால் தாமரை கருகிவிடும்! தமிழிசைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சூரிய சக்தி நினைத்தால் தாமரை கருகி விடும் என்று, மழை வந்தால் சூரியன் மறையும் என்று கூறிய தமிழிசைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்

சூரிய சக்தி நினைத்தால் தாமரை கருகிவிடும்! தமிழிசைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

சூரிய சக்தி நினைத்தால் தாமரை கருகி விடும் என்று, மழை வந்தால் சூரியன் மறையும் என்று கூறிய தமிழிசைக்கு ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி, எதிர்க்கட்சியான பாஜக என அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

தமிழகத்தில் மேகதாது அணை விவகாரத்தை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இடையே ஒன்றுபட்ட கருத்து காணப்படவில்லை. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினார். இதனை பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.

இந்த கூட்டத்தின் தொடர்ச்சியாக திருச்சியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசியவர்கள் மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கு அவ்வப்போது பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலளித்துக் கொண்டே இருந்தார்.

தமிழ்நாட்டிற்குள் மோடி நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று வைகோ பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழிசை, அறிவாலயத்திற்குள் விடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்தில் வைகோ இருப்பதாக கிண்டல் அடித்தார்.

இதையடுத்து ட்விட்டரில் பதிவிட்ட தமிழிசை, ''இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் குளம் நிறையும் தாமரை மலரும்.செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரை மலர செய்வோம் காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், ''சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்:

தாமரை மலர சூரிய சக்தி தேவை!

சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

.