கடைசியாக அமிதாப் பத்லா என்ற திரைப்படத்தில் நடித்தார்.
New Delhi: சினிமாத் துறையின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது இந்தாண்டு அமிதாப் பச்சனுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நம்மை இரண்டு தலைமுறைகளாக மகிழ்ச்சியில் ஆழ்த்தி வரும் திரையுலக சகாப்தம் அமிதாப் பச்சனுக்கு இந்தாண்டு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படும். அவருக்கு விருது வழங்குவதால் ஒட்டுமொத்த இந்தியாவும், உலக நாடுகளும் மகிழ்ச்சி கொள்கின்றன. அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திரையுலக நட்சத்திரங்கள் அமிதாப்புக்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர்.
பிரபல இயக்குனர் கரண் ஜோகர் தனது வாழ்த்துப் பதிவில், 'திரையுலகில் மற்றவருக்கு முன் உதாரணமாகவும், ஊக்கப்படுத்தும் நபராகவும் இருப்பவர் அமிதாப். அவர் வாழும் காலத்தில் நானும் இருக்கிறேன் என்பதை எண்ணி பெருமை கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
இந்தி நடிகர் அனில் கபூர் தனது வாழ்த்துப் பதிவில், 'அமிதாப் பச்சன் இல்லாமல் இந்திய சினிமாவே கிடையாது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை ஏற்றபோதும் அவர் சினிமாத் துறையை மாற்றி அமைத்து விடுவார். எண்ணிலடங்கா விருதுகளைப் பெற தகுதி வாய்ந்தவர் அமிதாப்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அமிதாப்புக்கு தற்போது 76 வயது ஆகிறது. முன்னதாக கடந்த ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது மறைந்த நடிகர் வினோத் கன்னாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை அமிதாப் 4 முறை பெற்றிருக்கிறார். கடைசியாக அவர் க்ரைம் த்ரில்லர் படமான பத்லாவில் நடித்திருந்தார்.