நடிகர் ரஜினிகாந்து, இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து, நலம் விசாரித்தார்.
ஹைலைட்ஸ்
- விஜயகாந்த், உடல்நிலை சரியில்லாமல் ஓய்வெடுத்து வருகிறார்
- அவர் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டார்
- சில நாட்களுக்கு முன்னர்தான் விஜயகாந்த் சென்னை திரும்பினார்
நடிகர் ரஜினிகாந்து, இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து, நலம் விசாரித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘நான் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்ற போது என்னை வந்து பார்த்த முதல் நபர் விஜயகாந்த் தான். அவரை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்' என்று உருக்கமாக பேசியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல், தீவிர அரசியலில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் அவர் அமெரிக்காவுக்கு சென்று, சிகிச்சை எடுத்துக் கொண்டார். சிகிச்சை முடிந்து சில நாட்களுக்கு முன்னர்தான் அவர் சென்னை திரும்பினார். இதையடுத்து அவரை பல பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்தும் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் சரி, சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்தபோதும் சரி, என் உடல்நலம் குறித்து விசாரித்த முதல் நபர் கேப்டன்தான். குறிப்பாக நான் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பியவுடன் போன் மூலம் தொடர்புகொண்டு முதலில், ‘உடம்ப பார்த்துக்கோங்க' என்று சொன்னதும் அவர்தான்.
அவர் நல்ல மனிதர். அவர் நலமுடன் இருக்க வேண்டும். அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மட்டும்தான் இன்று வந்துள்ளேன். இதில் துளியும் அரசியல் கிடையாது' என்று முடித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், ‘தற்போதைய அரசியல் சூழல் குறித்தும், தேர்தல் கூட்டணி குறித்தும் விஜயகாந்திடம் பேசினீர்களா?' என்று கேட்டனர். அதற்கு ரஜினி, ‘எனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்திவிட்டேன். இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை' என்று சொல்லி கும்பிடு போட்டுவிட்டு கிளம்பினார்.
முன்னதாக ரஜினி, ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு இல்லை. நான் தொடங்கப் போகும் அரசியல் இயக்கத்தின் இலக்கு அடுத்து வரவுள்ள சட்டமன்றத் தேர்தல்தான்' என்று மக்களவைத் தேர்தல் குறித்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - மக்களவை தேர்தலில் போட்டியிட 24-ம் தேதி முதல் விருப்ப மனு : தேமுதிக அறிவிப்பு