சென்சார் போர்டு ஒப்புதல் அளித்த காட்சிகளை நீக்குவது என்பது சரியானது அல்ல என்று ரஜினி கூறியுள்ளார்
Chennai: தமிழ்நாட்டில் சர்கார் படத்திற்கு எதிராக அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். படத்தில் அரசு அளித்த இலவச பொருட்களை மக்கள் தூக்கி எறிவதாக வரும் காட்சி பெரும் பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதனால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே எதிர்ப்புகள் வலுத்ததுடன், திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சர்கார் பட வாழ்த்து பேனர்கள் அதிமுகவினரால் கிழிக்கப்பட்டன.
நிலைமை அசாதாரணம் அடைந்ததை தொடர்ந்து நேற்றிரவு இயக்குனர் முருகதாஸ் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியான நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக முருகதாஸின் வீட்டிற்கு சென்றோம் என காவல்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜய்க்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.