This Article is From Mar 10, 2019

21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு!

எதிர்வரும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்

21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியில்லை: ரஜினிகாந்த் அறிவிப்பு!

2017, டிசம்பர் 31 ஆம் தேதி, சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, ‘போருக்குத் தயாராக இருங்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.

ஹைலைட்ஸ்

  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என்று ரஜினி முன்னரே கூறியிருந்தார்
  • தற்போது இடைத் தேர்தலிலும் போட்டியில்லை என்றுள்ளார் ரஜினி
  • லோக்சபா தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் ரஜினி கூறியுள்ளார்

‘நாடாளுமன்றம் எங்கள் இலக்கு அல்ல, சட்டமன்றம்தான் எங்கள் இலக்கு' என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், எதிர்வரும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ளார். 

2017, டிசம்பர் 31 ஆம் தேதி, சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, ‘போருக்குத் தயாராக இருங்கள். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி' என்று பகிரங்கமாக அறிவித்தார். அடுத்ததாக, ‘ரஜினி மக்கள் மன்றம்' என்ற அமைப்பை ஆரம்பித்து, தனது பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். தொடர்ந்து, மாவட்டப் பொறுப்பாளர்கள் முதல் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை நியமிக்கும் பணிகளைச் செய்தார் ரஜினி. அனைத்தும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடு என்று நினைத்திருந்தபோது அறிக்கை வெளியிட்டார் ரஜினி. 

‘எங்கள் இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. சட்டமன்றத் தேர்தல்தான். எனவே, மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. எந்தக் கட்சிக்கும் ஆதரவும் கொடுக்கப் போவதில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமாக இருப்பது தண்ணீர் பிரச்னை. அதை யார் தீர்த்து வைப்பார்கள் என்று மக்கள் நினைக்கிறார்களோ அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்' என்று மக்களிடம் கேட்டுக் கொண்டார் ரஜினி. 

இந்நிலையில் இன்று மாலை லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ளன. அத்துடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழலில் இன்று சென்னை விமான நிலையத்தில் ரஜினி, '21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை' என்று அறிவித்துள்ளார். மேலும், ‘யாருக்கு வருகின்ற தேர்தலில் ஆதரவு கொடுப்பீர்கள்' என்று கேட்டதற்கு, ‘அது குறித்து சொல்ல முடியாது' என்று கூறி கிளம்பிவிட்டார். 


 

.