This Article is From Sep 06, 2018

‘1 லட்சம் பேர் கலந்துகொண்டனர்!’- அமைதிப் பேரணி குறித்து அழகிரி பேட்டி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்காக இந்த அமைதி பேரணி நடத்தப்பட உள்ளதாக அவரது மகன் அழகிரி முன்னர் அறிவித்திருந்தார்

‘1 லட்சம் பேர் கலந்துகொண்டனர்!’- அமைதிப் பேரணி குறித்து அழகிரி பேட்டி

அழகிரி தலைமையில் இன்று திருவல்லிக்கேணியில் ஆரம்பித்த அமைதிப் பேரணி, மெரினாவில் இருக்கும் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சற்று நேரத்துக்கு முன்னர் வந்தடைந்தது. கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘ஒரு லட்சம் பேர் இன்று அமைதிப் பேரணியில் கலந்து கொள்ள வந்தனர். இவர்கள் எல்லோரையும் திமுக-விலிருந்து வெளியே அனுப்பிவிடுவார்களா? இது குறித்து அவர்களிடம் கேட்டு சொல்லுங்கள். கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடந்தது. வேறு எந்த நோக்கத்துடனும் பேரணி நடத்தப்படவில்லை. பேரணி, பெரும் வெற்றியடைந்துள்ளது’ என்று பேசியுள்ளார்.

சுமார் 11 மணி அளவில் கருப்புச் சட்டை அணிந்து அமைதிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக அழகிரி வந்தார். அவர் ஊர்வலமாக கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றார்.   

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் 8 ஆம் தேதி மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, சில நாட்களுக்குப் பின்னர் கருணாநிதி அடக்கம் செய்த இடத்துக்குச் சென்ற அழகிரி, ‘என் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்லிவிட்டேன். அது குறித்து மக்களுக்கு விரைவில் தெரியவரும். திமுக-வின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் தான் உள்ளனர்’ என்று கருத்து கூறி பகீர் கிளப்பினார்.

k0hh8ljg

தொடர்ந்து அவர், செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார். ‘அமைதி பேரணியைத் தொடர்ந்து திமுக-வுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் வரும். என் தேர்தல் பணிகளையும், ஒருங்கிணைப்புப் பணிகளையும் எனது அரசியல் எதிரிகள் கூட பாராட்டுவார்கள். சில திமுக தலைவர்கள் இப்போதாவது என்னைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்’ என்றார். தொடர்ந்து அவர் திமுக-வுக்கு எதிராகவும், திமுக-வின் மூத்த நிர்வாகிகளுக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்னர் அவர், ‘நாங்கள் திமுக-வில் இணைய தயாராக இருக்கிறோம். கட்சியில் சேர்ந்தால், ஸ்டாலினை நான் தலைவராக ஏற்கத் தயார் என்று தான் அர்த்தம்’ என்று கூறி யூ-டர்ன் அடித்தார். ஆனால் அமைதி பேரணி நடந்தே தீரும் என்றார். அதன்படி இன்று 11 மணி அளவில் அமைதிப் பேரணி ஆரம்பித்து சற்று நேரம் முன்னர் முடிந்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, கட்சிக்கு எதிராக நடந்ததாக கூறி, அழகிரியை திமுக-விலிருந்து நீக்கினார் அப்போது தலைவராக இருந்த கருணாநிதி.

.