சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
New Delhi: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரத்தை வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதி கொடுத்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதே நேரத்தில், ‘விசாரணைக்கு முறையாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்றும் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது நீதிமன்றம்.
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது 2006-ம் ஆண்டு மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேசன் சர்வீசஸ் ஹோல்டிங்க்ஸ் லிமிடெட், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது.
இந்த முதலீட்டுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவின் அனுமதியை பெறாமல், விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் மூலம் ப.சிதம்பரம் அனுமதி அளித்து விட்டார் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அனுமதியைப் பெறுவதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கார்த்தி சிதம்பரம் தரப்பு, ‘வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கார்த்தி சிதம்பரம், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளில் டென்னிஸ் விளையாட உள்ளார். எனவே, அவருக்கு பயணம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும்' என்று வாதம் வைத்தது.
இதற்கு அமலாக்கத் துறை தரப்பு, ‘நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு அளித்த உரிமைகளை, அவர் தவறாக பயன்படுத்தி வருகிறார். கடந்த 6 மாதங்களில் அவர் 51 நாட்கள் வெளிநாடுகளில் இருந்துள்ளார். அவர் விசாரணையை திசைத் திருப்பப் பார்க்கிறார்' என்று குற்றம் சாட்டியது.
அனைத்து வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், ‘விசாரணையிலிருந்து தப்பிக்கும்படி கார்த்தி சிதம்பரம் நடந்து கொண்டால், அவருக்கு டென்னிஸ் விளையாடவெல்லாம் அனுமதி தரப்படாது. மீண்டும் இந்த வழக்கு வரும் புதன் கிழமை விசாரணைக்கு வரும். அதற்குள் கார்த்தி, எந்தெந்த தேதிகளில் ஆஜராக வேண்டும் என்பதை அமலாக்கத் துறை சொல்ல வேண்டும்' என்று உத்தரவிட்டு வழக்கைத் தள்ளி வைத்தது.
மீண்டும் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது. அதே நேரத்தில் மார்ச் 5,6,7 மற்றும் 12 ஆம் தேதிகளில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்றும், 1 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் கூறியது.