This Article is From Aug 01, 2019

உன்னாவ் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்

சிபிஐ தலைமை அதிகாரி தகவல்களை தொலைபேசியிலே பெற்று இன்றே வழக்கின் நிலை குறித்து மேம்படுத்தப்பட்ட தகவல்களை வழங்க முடியும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உன்னாவ் பாலியல் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு

New Delhi:

உன்னாவ் பாலியல் வழக்கை 7 நாட்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கை விசாரித்து முடிக்க ஒரு மாதம் அவகாசம் கேட்ட சிபிஐ-யின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. 

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாவலர்களான 3 போலீசாரை இடைநீக்கம் செய்து உத்தரப்பிரதேச அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த எம்.எல்.ஏ செங்காரை, கட்சியில் இருந்து நீக்கி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் உன்னாவ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் சென்ற காரின் மீது, பதிவு எண் இல்லாத லாரி மோதியது. பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய இந்த விபத்து சம்பவத்தில், அந்தச் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு அவர் தொடர்ந்து போராடி வருகிறார். 

தற்போது இந்த சம்பவம் குறித்தும் செங்கார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பு, இது குறித்து விசாரணை செய்து வருகிறது. 

கடந்த ஓர் ஆண்டாக எம்.எல்.ஏ செங்கார் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் பாஜக எடுக்கவில்லை என்பதை முன்வைத்து, பல தரப்பினரும் கண்டனம் செய்து வந்தனர்.

உன்னாவ் விவகாரத்தில் சம்பந்தமுடைய 4 வழக்குகள் உத்தர பிரதேசத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த வழக்குகளை டெல்லிக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர்தான் எம்.எல்.ஏ செங்கார் தரப்பிடமிருந்து தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிபக்குக் கடிதம் எழுதியது. 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குல்தீப் செங்கார் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து இப்போது வரை இந்த வழக்கில் பெரிய முன்னேற்றம் இல்லாததைத் தொடர்ந்து நீதிமன்றம், சிபிஐ-யிடம் வழக்கு முன்னேற்றம் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு, செங்கார் வீட்டுக்கு வேலை கேட்ட சென்றுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி. அப்போதுதான் செங்கார் மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்துகிறார் அந்தச் சிறுமி. 
 

.