हिंदी में पढ़ें বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 02, 2019

பேச்சுவார்த்தை முயற்சிகள் தோல்வி! திங்கள் முதல் அயோத்தி வழக்கு தினந்தோறும் விசாரணை!!

மத்தியஸ்த குழு மூலம் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மனுதாரர்களில் ஒருவர், உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, தற்போதைய முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

அயோத்தி வழக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் வழக்கை தினந்தோறும் விசாரிக்க முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறுகையில், 'பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்க்க முயற்சி மேற்கொண்டோம். அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே ஆகஸ்ட் 6-ம்தேதி முதல் வழக்கை தினந்தோறும் விசாரிக்க முடிவு எடுத்திருக்கிறோம்' என்றார். 

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்யா. இங்குள்ள ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், மற்றும் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், எஸ்.ஏ.நசீர் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வால் விசாரிக்கப்பட்டு வந்தது. மார்ச் 5ம் தேதியுடன் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. அதன் பின்னர்தான் மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையிலான மூவர் குழுதான், அயோத்யா வழக்கில் மத்தியஸ்தம் செய்தது. அந்த குழுவில் ‘ஆர்ட் ஆஃப் லிவ்விங்' அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் மற்றும் மத்தியஸ்தம் செய்வதில் பெயர் போன ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இருந்தனர். வழக்கில் மத்தியஸ்த குழு சுமூக தீர்வு காண, ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

Advertisement

மத்தியஸ்த குழு மூலம் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று மனுதாரர்களில் ஒருவர், உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டதைத் தொடர்ந்து, தற்போதைய முடிவுக்கு நீதிமன்றம் வந்துள்ளது.

இந்த நிலையில் மத்தியஸ்த பேச்சுவார்த்தையால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வழக்கு நாள்தோறும் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement