Read in English हिंदी में पढ़ें
This Article is From Aug 06, 2019

பேச்சுவார்த்தை தோல்வி: அயோத்தி வழக்கு விசாரணையை ஆரம்பிக்கிறது உச்ச நீதிமன்றம்!

ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது
  • முன்னதாக அயோத்தி பிரச்னையைத் தீர்க்க மத்தியஸ்த குழு அமைக்கப்பட்டது
  • மத்தியஸ்த குழுவால் அயோத்தி விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை
New Delhi:

அயோத்தி வழக்கை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இன்று முதல் அது குறித்தான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. 

இதற்கு முன்னர் அயோத்தி விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி எப்.எம்.கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அந்த குழுவில் இருந்தனர். கடந்த மார்ச் மாதம், மத்தியஸ்தம் செய்வதை இந்த குழு ஆரம்பித்தது. 

8 வாரத்தில் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முதலில் உத்தரவு பிறப்பித்திருந்தது. பிறகு, ஆகஸ்ட் 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் குழு உறுப்பினர்கள், “எங்களால் முடிந்த வரை முயன்றோம். ஆனால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டுள்ள சிலருக்கு மத்தியஸ்தம் செய்வதில் ஈடுபாடு இருக்கவில்லை” என்று நீதிமன்றத்திடம் கூறிவிட்டது. இதைத் தொடர்ந்துதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, வழக்கை விசாரிக்கலாம் என்று முடிவெடுத்தது. 

Advertisement

நீதிமன்ற அமர்வில் எஸ்.ஏ.போட்கே, சந்திராசூத், அஷோக் பூஷண், எஸ்.ஏ.நசீர் ஆகிய நீதிபதிகளும் இடம் பெற்றுள்ளனர். வரும் நவம்பர் மாதம் தலைமை நீதிபதி கோகாய், ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்னர் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உத்தர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது அயோத்தி. அங்கு 2.77 ஏக்கரில் 16வது நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி இருந்தது. அந்த மசூதியை முகலாய மன்னர் பாபர் கட்டினார் என்று சொல்லப்படுகிறது. அந்த மசூதியை 1992 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் வலதுசாரி அமைப்பினர் தகர்த்தனர். மசூதி இருந்த இடத்தில் முன்னதாக ஒரு கோயில் இருந்தது என்றும், ராமர் பிறந்த இடத்தில் மசூதி இருக்கிறது என்றும் அவர்கள் நம்பினர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடந்த கலவரத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர். 

Advertisement

அங்குள்ள ராமஜென்ம பூமி-பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர் நீதிமன்றம், 2010ல் தனது தீர்ப்பை வழங்கியது.

அந்த தீர்ப்பின்படி, 2.77 ஏக்கர் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ப் வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய அமைப்புகள் பகிர்ந்து கொள்ள உத்தரவிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, 14 மேல் முறையீடு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குதான் இன்று வரை நடந்து வருகிறது. 

Advertisement