உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர் தலைமை நீதிபதி மீது புகார் அளித்துள்ளார்.
New Delhi: பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரணைக்குழு முன்பு ஆஜராக உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்து வருகிறார். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி பெண் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதினார். இந்த குற்றச்சாட்டை ரஞ்சன் கோகாய் மறுத்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க 2 பெண்கள் உள்பட 3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டது.
முன்னதாக இந்த குழுவில் நீதிபதி என்.வி. ரமணா இருந்தார். அவர் ரஞ்சன் கோகாயின் குடும்ப நண்பர் என்று சம்பந்தப்பட்ட பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து ரமணா நீக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி மீது புகார் அளித்த பெண் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட விசாரணைக்குழு முன்பு, தலைமை நீதிபதி ஆஜராக உள்ளார். இதற்கு இன்று அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெறும் தேதியை நீதிபதிகள் குழு முடிவு செய்யும்.
முன்னதாக விசாரணைக்குழுவில் ஆஜராகும்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு விசாரணைக்குழு தலைவர் நீதிபதி எஸ்.ஏ. பாப்டே கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்த ரஞ்சன் கோகாய் விசாரணைக்குழு முன்பு ஆஜர் ஆகுவதாக தெரிவித்துள்ளார்.