This Article is From Dec 04, 2019

8 வழிச்சாலை வழக்கு: அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

மத்திய அரசு தரப்பே அவகாசம் கோருகிறீர்கள். திட்டத்தை செயல்படுத்த காலதாமதம் ஆகிறது எனக்கூறி, நீங்கள் தான் முறையிட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தீர்கள். தேதியும் வாங்கிவிட்டு தற்போது மீண்டும் ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதா? 

8 வழிச்சாலை வழக்கு: அவகாசம் கோரும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

சென்னை-சேலம் வழிச்சாலை வழக்கில், அவகாசம் கோரிய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்க சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த ஆண்டில் அறிவிப்பு அரசாணையை வெளியிட்டது. 

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சட்ட விதி மீறல்களை அடிப்படையாக கொண்டு 8 வழிச்சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் எட்டு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டது.

இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது, 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக பதில் மனு தாக்கல் மற்றும், திட்டம் தொடர்பான விளக்க அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்திருந்தது. அதன்படி, இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் ஆவணம் மற்றும் திட்டம் தொடர்பான விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மத்திய அரசு தரப்புக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மத்திய அரசு தரப்பில் வாதம் செய்ய வேண்டும் என்று கூறி இன்று தேதி வாங்கப்பட்டது.

ஆனால் தற்போது மத்திய அரசு தரப்பே அவகாசம் கோருகிறீர்கள். திட்டத்தை செயல்படுத்த காலதாமதம் ஆகிறது எனக்கூறி, நீங்கள் தான் முறையிட்டு வழக்கை விரைந்து விசாரிக்க கோரி வழக்கு தொடர்ந்தீர்கள். தேதியும் வாங்கிவிட்டு தற்போது மீண்டும் ஒத்திவைக்க கோருவது ஏற்புடையதா? 

கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியிருந்தோம். மூன்று மாதங்களாகியும் இதுவரை தாக்கல் செய்யாத மத்திய அரசின் செயல்பாடு அதிருப்தி அளிக்கிறது, என கூறினர். இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

.