சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், அவருக்கு ரூ.25லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி, சிவகாசி அரசு இரத்த வங்கியில் 21 வயது இளைஞர் ரத்ததானம் செய்துள்ளார். அடுத்த சில நாட்களில், அந்த இளைஞரிடம் இருந்து பெறப்பட்ட ரத்தம் சாத்தூரைச் சேர்ந்த, 8 மாத கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது.
ரத்தம் செலுத்தப்பட்ட பிறகு, கர்ப்பிணிக்கு காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதனால் டிசம்பர் 17-ம் தேதி, சாத்தூர் சுகாதார மையத்தில் இரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டதில் எச்.ஐ.வி தொற்று இருப்பது உறுதியானது. இதற்கிடையே, ரத்த தானம் செய்த இளைஞர் விஷம் குடித்து சில நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்தார்.
கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி சிகிச்சைக்கான மருந்துகள் வழங்கப்பட்டது. இதனை அடுத்து, அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. சிவகாசி அரசு மருத்துவமனையில் தானமாக பெற்ற ரத்தத்தை முறையாக பரிசோதிக்காதது தான், இதற்கு காரணம். பெரும்பாலான ரத்த மையங்களில் பணியாளர்கள் கிடையாது. எனவே பாதுகாப்பான முறையில் ரத்தம் பெற உபகரணங்களை வழங்கவும், தமிழகம் முழுவதும் எய்ட்ஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், காலிப்பணியிடங்களை நிரப்பவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில் கூறியிருந்ததாவது,
எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றியதால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சத்தை இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும். அதில் 10 லட்ச ரூபாயை அந்த பெண்ணின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும். மீதம் உள்ள 15 லட்ச ரூபாயை மைனர்களான அவருடைய 2 பெண் குழந்தைகள் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். அவர்கள் மேஜரான பின்பு இந்த தொகையை எடுத்துக் கொள்ளும்படியாக டெபாசிட் செய்யப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 450 சதுர அடிக்கு குறையாமல் 2 படுக்கை அறைகளை கொண்டதாகவும், சுற்றுச்சுவருடனும் கூடிய வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை வருகிற ஜனவரி மாதம் 11–ந் தேதி தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.