New Delhi: கடந்த இரண்டு வாரங்களாக கேரளவை புரட்டிப்போட்டுள்ள மழையால், அம்மாநிலமே நிலைகுலைந்துள்ளது. இந்நிலையில், கேரளாவின் சேதாரங்களை சரிசெய்ய அதிக நிதித் தேவை அவசியமாகியுள்ளது. உலகின் பல்வேறு மூலைகளிலில் இருந்தும் கேரளாவுக்கு உதவிகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் நிதியுதவி செய்ய முன்வந்துள்ளனர்.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் பெய்து வரும் மழையால், இதுவரை 300-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவசர நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கேரளாவில் வழக்கமாக பெய்யும் மழையை விட 250 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளது. இதனால், மாநிலத்தில் உள்ள 35 அணைகளில் இருந்தும் நீர் திறந்துவிடப்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது கேரள அரசு.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் குவாலிகர் மற்றும் சந்திராசூத் அடங்கிய அமர்வு, ‘உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் 25 நீதிபதிகளும் கேரள வெள்ள பாதிப்புகளுக்காக நிதியுதவி செய்வர்’ என்று தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நீதிபதிகளும் 25,000 ரூபாய் நிதியுதவி செய்வர் என்று கூறப்படுகிறது.
இன்றும் கேரளாவில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.