This Article is From Jul 03, 2019

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழ் மொழியிலும் வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி ஆங்கிலத்தோடு, ஹிந்தி, அஸாமீஸ், கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் உலகிலேயே தீர்ப்பு விவரங்களை மாநில மொழிகளிலும் வெளியிடும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும். இதற்கான மென்பொருளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவு உருவாக்கியுள்ளது. தலைமை நீதிபதியும் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது. 

ஆனால், இதில் தென்னிந்திய மொழிகளில் கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை தமிழிலும் வெளியிட வேண்டும் என்பது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவது குறித்த செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. 

வழக்குகளைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்னையின்றி தீர்ப்புகளின் சாராம்சத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த முயற்சி, இந்திய நீதி பரிபாலன வரலாற்றில் மிக முக்கிய மைல்கல் என்றே கருதுகிறேன். 

Advertisement

இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்க உள்ள நிலையில், இதற்கான பட்டியலில், தமிழ் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது. 

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ் மொழியை அவசியம் சேர்த்திடுமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


 

Advertisement