Supreme Court: நீதிமன்ற அமர்வு, இன்று பிராசாந்த் பூஷண் மீது சுமத்தப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்து, வரும் 20 ஆம் தேதி தண்டனை விவரம் குறித்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.
ஹைலைட்ஸ்
- 3 பேர் கொண்ட அமர்வு வழக்கை விசாரித்தது
- தண்டனை விவரம் குறித்து அறிவிக்கப்படவில்லை
- வரும் 20 ஆம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும்
New Delhi: உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததாக பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது பதியப்பட்டிருந்த வழக்கில், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளான அருண் மிஸ்ரா, பிஆர் கவாய் மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வுக்குக் கீழ் பிரசாந்த் பூஷணுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்டது.
நீதிமன்ற அமர்வு, இன்று பிராசாந்த் பூஷண் மீது சுமத்தப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்து, வரும் 20 ஆம் தேதி தண்டனை விவரம் குறித்து தெரிவிப்பதாகக் கூறியுள்ளது.
தலைமை நீதிபதி பாப்டே, சூப்பர் பைக் ஒன்றில் அமர்ந்திருந்த போட்டோ குறித்து பிரசாந்த் பூஷண், “நீதிபதி பாப்டே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்துள்ள போதும் ஏன் தலைக்கவசம் அணியவில்லை?” என ட்விட்டர் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மன்னிப்புக் கோரும் வகையில், அந்த பைக், ஸ்டாண்டு போட்டு நிறுத்திவைத்ததைப் பார்க்காமல் அப்படி கருத்து தெரிவித்து விட்டதாக பூஷண், வழக்கு விசாரணையின்போது தெரிவித்தார்.
நீதிமன்ற விசாரணையின் போது பூஷண், “பைக், ஸ்டாண்டு போட்டு நிறுத்திவைக்கப்பட்டதைப் பார்க்காமல் அப்படியொரு கருத்தைக் கூறிவிட்டேன். ஸ்டாண்டு போட்ட பைக்கில் அமர்ந்திருப்பதற்கு ஹெல்மட் தேவையில்லை என்பதை உணர்கிறேன். எனது ட்விட்டின் அந்தப் பகுதிக்கு வருந்துகிறேன். ஆனால், மற்ற பகுதிகளுக்கு எந்த வருத்தமும் இல்லை” எனக் கூறினார்.
அவர் மேலும், “எனது கருத்துரிமையையே நான் வெளிப்படுத்தியிருந்தேன். நான் நீதிமன்றத்தின் செயல்பாடு குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இது அவமதிப்பு ஆகாது” என விளக்கம் கொடுத்திருந்தார்.
புஷண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, “பிரசாந்த் பூஷண் பதிவிட்ட இரண்டு ட்வீட்டுகள் நீதிமன்ற அமைப்புக்கு எதிரானது அல்ல. நீதிபதிகளின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு எதிராகத்தான் அவர் கருத்துக் கூறியிருந்தார். அது நீதி அமைப்புக்கு எதிரானதல்ல.
தலைமை நீதிபதி குறித்தோ அல்லது வேறு நீதிபதிகள் குறித்தோ பிரசாந்த் பூஷண் கூறிய கருத்தானது, நீதிமன்றத்தின் தரத்தை தாழ்த்துவது ஆகாது” என்று கூறினார்.