பாலக்காடு யானை உயிரிழந்த சம்பவம் உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறியிருந்தது.
New Delhi: யானைகள் உயிரிழப்பு தொடர்பாக மத்திய அரசு, கேரளா மற்றும் 12 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மே மாதம் கேரள மாநிலம் பாலக்காட்டில், கர்ப்பிணி யானை வெடி வைத்து கொல்லப்பட்டது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உச்ச நீதிமன்றமே நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெடிவைத்து விலங்குகளை கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமான செயல் என உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14 மற்றும் 21 ஆகியவை ஒவ்வொரு உயிர்களுக்கும் கண்ணியத்துடன் வாழும் உரிமையை அளிக்கின்றன. ஆனால் வெடி பொருட்களை வைத்து மிருகங்களை கொல்வது என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.
மிருகவதை தடுப்பு சட்டம் 1960 – யை இன்னும் பலப்படுத்தி, மிருகங்களுக்கு எதிராக கொடூர குற்றங்களை செய்வோருக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு, கேரளா மற்றும் 12 மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலக்காடு யானை உயிரிழந்த சம்பவம் உணர்வுப்பூர்வமான விஷயமாக மாறியிருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இதுபோன்ற செய்திகளை பத்திரிகைகளும், ஊடகங்களும் மிகுந்த கவனத்துடன் கையாள உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
அரசு தரப்பிலிருந்து விளக்கம் வெளியிடப்படாதபோது, இதுபோன்ற சம்பவங்கள் சமூக வலைதளங்களில் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றன என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
கேரள மாநிலம் பாலக்காட்டில் கர்ப்பிணி யானை ஒன்று, அன்னாச்சி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்டது. அதற்கு முன்பாக படுகாயங்களுடன் சுற்றி வந்த யானை, கடைசியாக ஆறு ஒன்றில் பரிதாபமாக மே 27-ம்தேதி உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவின் கிராமப்புறங்களில் பழங்களுக்குள் வெடி வைத்து அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகளை கொல்வது என்பது வழக்கமாக இருந்து வருகிறது.