குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக ஜனவரி 22ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்தித்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இந்த விசாரணையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு இடைக்கால தடைவிதிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சட்டம் தடை செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து நாங்கள் ஆராய்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
நீதிபதிகள் பி.ஆர்.காவாய் மற்றும் சூர்யா காந்த் உள்ளிட்டோர் இடம்பெற்ற இந்த 3 நீதிபகள் கொண்ட அமர்வு, இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி. 22ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ள நிலையில், எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், அசாமில் ஆளும் பாஜகவின் கூட்டணி கட்சியான அசோம் கானா பரிஷாத், திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஏராளமான கட்சிகள், பொதுமக்கள் என 60க்கும் மேற்பட்டோர் இந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
குடியுரிமை வழங்குவதற்கு மதம் அடிப்படையாக இருக்க முடியாது என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். புதிய சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பிற்கு எதிரானது, சட்டவிரோதமாக குடியேறியவர்களை மதத்தின் அடிப்படையில் குடிமக்களாக ஒப்புக்கொள்வது வாழ்க்கை மற்றும் சமத்துவத்திற்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.
இந்த சட்டத்திருத்தமானது, தேசத்தின் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கொள்கையை பாதிக்கிறது. அனைத்து மதங்களின் உறுப்பினர்களுக்கும் சமமான உரிமையை வழங்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்று மனுதார்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புதிய குடியுரிமை திருத்தச் சட்டமானது, 2015ம் ஆண்டுக்கு முன்பாக பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கிறது.