This Article is From Jun 12, 2020

“மருத்துவர்கள் அதிருப்தியடைவதை ஏற்றுக்கொள் முடியாது! அரசு தலையிட வேண்டும்“: உச்சநீதிமன்றம்

மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்து வந்த ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கக்கூடாது" என்றும் கூறியது.

“மருத்துவர்கள் அதிருப்தியடைவதை ஏற்றுக்கொள் முடியாது! அரசு தலையிட வேண்டும்“: உச்சநீதிமன்றம்

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 3 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டக்களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. “தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி வீரர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய மருத்துவர்கள் அதிருப்தியடைவதை ஏற்றுக்கொள்ள முடியாது“ என கூறியுள்ளது. மருத்துவர்களின் பிரச்னைகளை அரசுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிராக பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை 14 நாட்கள் பணிகளுக்கு பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகளும் ஒதுக்கப்பட வேண்டும் என அருஷி ஜெயின் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்து ஹைதராபாத் மற்றும் டெல்லியில் இருந்து வந்த ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டிய நீதிமன்றம், "இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கக்கூடாது" என்றும் கூறியது.

இதுபோன்ற சிக்கல்களை தீர்ப்பதற்கு அரசு மேலோட்டமான நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. டெல்லியில் மருத்துவர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ளதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த சிக்கல்களை அரசு கருத்தில் கொண்டு, பிரச்னையில் தலையிட்டு தீர்க்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிக்கலில் நீதிமன்றம் தலையிட வேண்டியதில்லை என தெரிவித்துள்ளது.

இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மருத்துவர்களுக்கும் ஊதிய குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பணிகள் அதிகரித்துள்ள போதிலும் இது நடந்துள்ளது. எனவே மருத்துவர்களுக்கு ஊதிய வெட்டு கூடாது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகியிருந்தார். அரசு தரப்பில், “தங்குமிடம் மற்றும் சுகாதார வல்லுநர்கள் எதிர்கொள்ளும் பிற பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டது.

.