Air Quality in Delhi:டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசு அதிகரித்துள்ளது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி மிகவும் பரிதாப நிலையில் உள்ளதாகவும், நிலைமை தீவிரம் அடைந்து விட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கார்களால் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மதன் லோகுர் தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவில், “ காலையிலும், மாலையிலும் டெல்லி வீதிகளில் மக்களால் நடக்கமுடியவில்லை என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் புராதன டெல்லியின் ரயில் நிலையங்களில் சென்று பார்த்தால் அங்கு ஏராளமானோர் சைக்கிள் மற்றும் ரிக்ஷாக்களில் செல்வதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு வேறு வழியில்லை.
தங்கள் வாழ்வாதாரத்திற்காக மாசடைந்த காற்றை சுவாசித்து வெளியே செல்கின்றனர். அவர்களுக்கு டெல்லி மாநில அரசு என்ன பதில் சொல்லும். மாசுபட்ட காற்றை சுவாசித்துக் கொண்டு உயிர் விட வேண்டும் என்று மக்களைப் பார்த்து டெல்லி அரசு சொல்லுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேபோன்று 10 ஆண்டுகள் பழைமையான டீசல் கார்களையும், 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் கார்களையும் டெல்லி அரசு சோதனை செய்து, புகையை அதிகளவு வெளிப்படுத்தும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.