This Article is From Oct 24, 2018

3 மாதங்களில் லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

மூன்று மாதங்களில் லோக் ஆயுக்தாவை அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 மாதங்களில் லோக் ஆயுக்தா அமைக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் லோக் ஆயுக்தா இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின் போது, லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா கடந்த ஜூலை மாதம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், லோக் ஆயுக்தா தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா அமைக்காதது குறித்து தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிப்ரவரி மாதத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசுக்கு மூன்று மாதம் அவகாசம் அளித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டது.
 

.