This Article is From Oct 01, 2019

எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், உச்ச நீதிமன்றம் கடந்த 2018 வழங்கிய தீர்ப்பு இருந்தது.

எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம்: உச்சநீதிமன்றம்

எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம்

New Delhi:

எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து உரிய விசாரணையின்றி கைது செய்யப்படும் பிரிவை நீக்கி கடந்த 2018 மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த உத்தரவை திரும்ப பெற்றுள்ளது. அதன்படி, எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது செய்ய தடையில்லை என்று, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

முன்னதாக, கடந்த 2018ல் எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது. அதன்படி, இந்த சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது.

அதேசமயம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2 நீதிபதிகள் அமர்வு வதித்த இந்த உத்தரவுக்கு எதிரான வழக்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதில், இந்த வழக்கின் வாதங்கள் கடந்த மாதம் 18-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் கைது நடவடிக்கை கூடாது என 2 நீதிபதிகள் அமர்வு விதித்த தடையை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வு நீக்கி உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, எஸ்.சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார் செய்தாலே இனி கைது செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.