2022-ல் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது.
New Delhi: ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில் டெல்லியில் செயல்படுத்தப்படவுள்ள நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் சீரமைப்பு பணிகளுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ராஜிவ் சூரி என்பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, 'இதே விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது கொரோனா பிரச்னை நாடு முழுவதும் தீவிரமாக இருக்கிறது. எனவே, யாரும் டெல்லியில் நாடாளுமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட மாட்டார்கள். இதேபோன்று, இந்த வழக்கை விசாரிப்பதற்கான அவசரமும் இப்போது ஏற்படவில்லை' என்றுகூறி, ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.
சென்ட்ரல் விஸ்தா என்ற பெயரில் இந்த திட்டம் ழைக்கப்படுகிறது. இதற்காக டெல்லியின் மத்திய பகுதியில் 86 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது. இதனால் ஏராளமான மரங்கள் அழிக்கப்படும் என்றும், பசுமைப் பகுதி பாதிப்பு அடையும் என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் அரசு சார்பாக தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜரானார். வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே மற்றும் நீதிபதி அனிருதா போஸ் ஆகியோர் விசாரித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின்போது குஜராத்தை சேர்ந்த எச்.சி.பி. டிசைன் என்ற நிறுவனத்திற்கு நாடாளுமன்றம் சீரமைப்பு தொடர்பான கான்ட்ராக்ட் வழங்கப்பட்டது. இதன்பின்னர், வரலாற்று சிறப்ப மிக்க ரைசினா ஹில் காம்ப்ளக்ஸ் மற்றும் ஏற்கனவே இருக்கும் நாடாளுமன்ற வளாகத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படாது என்று அரசு தெரிவித்திருந்தது.
முன்னதாக NDTVக்கு பேட்டி அளித்திருந்த நகர்ப்புற மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 'நாடாளுமன்றத்தின் வெளிப்புறத் தோற்றத்தை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை. இப்போது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் அமர்வதற்கே போதிய இடம் இல்லை. நெருக்கடியாக இருக்கிறது. இதனால்தான் விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.
இந்தியாகேட் - குடியரசு தலைவர் மாளிகை இடையே இந்த சென்ட்ரல் விஸ்தா திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 2021 நவம்பவருக்குள் இந்த திட்டம் முடிவுக்கு வரும் என்றும், 2022 மார்ச் மாதத்தில் புதிய நாடாளுமன்றமும், 2024-ல் மத்திய அரசின் பொது தலைமை செயலகமும் செயல்பாட்டிற்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022-ல் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ளது. இதை மனதில் வைத்து சென்ட்ரல் விஸ்தா திட்டத்தை 2022-ல் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.