ஊரடங்கு காலத்தில் ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது: உச்சநீதிமன்றம்
New Delhi: தனியார் நிறுவனங்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய தகவலாக, கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தின் போது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக ஜூலை இறுதி வரை எந்தவொரு கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக தொழில் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை மாநில அரசுகள் எளிதாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அப்படி, பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை எனில் தொழிலாளர் நலத்துறையை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் முழு ஊதியத்தையும் கட்டாயம் வழங்க வேண்டும் என மார்ச் 29ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு தொடர்பாக பதிலளிக்க மேலும் 4 வார கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் முடக்கப்பட்ட நாட்களுக்கு எந்த பிடித்தமுமின்றி அனைத்து நிறுவனங்களும், தங்களது ஊழியர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டது.
இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில், தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் தேவை என்பதை மறுக்க முடியாது.
50 நாட்களுக்கு ஊதியம் வழங்குவது தொடர்பான சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, மார்ச்-29ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை, ஜூலை கடைசி வாரத்தில் விசாரிப்பதாக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.