5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
New Delhi: காஷ்மீருக்கு வழங்கி வரப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த மனுக்களை தற்போது நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்து வருவதால், விரிவான அமர்வு விசாரிக்க அவசியமில்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி 23ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்குப் பரிந்துரைக்குமா என்பது தொடர்பான முடிவை அறிவிக்காமல் வழக்கை ஒத்திவைத்தது.
இதைத்தொடர்ந்து, இன்று அந்த வழக்கு விசாரணையில், சட்டப்பிரிவு 370-ல் இரண்டு பழைய தீர்ப்புகளைப் பற்றியும் குறிப்பிட்ட நீதிமன்றம், இரண்டு தீர்ப்புகளுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லை என்று கூறியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் மத்திய அரசு அதிரடியாக அறிவித்தது.
இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காஷ்மீரில் உள்ள 3 முன்னாள் முதல்வர்கள் உட்படப் பல அரசியல் தலைவர்களைத் தடுப்பு காவலில் வைத்த மத்திய அரசு தொலைப்பேசி, இண்டர்நெட் உள்ளிட்ட அனைத்து தகவல்தொடர்பு சேவைகளையும் முடக்கியது.
முன்னாள் முதல்வர் ஃபாரூக் அப்துல்லா, அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி உள்ளிட்டோர் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சட்டம் அவர்களை 3 மாதங்கள் முதல் பல நீட்டிப்புகளுடன் எந்த விசாரணையும் இல்லாமல் தடுப்பு காவலில் வைக்க உதவும்.
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் நியாயப்படுத்திய மத்திய அரசு, இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக அங்கு ஒரு உயிரிழப்புகள் கூட ஏற்படவில்லை என்றும் எந்தவொரு துப்பாக்கிச்சூடு சம்பங்களும் நடக்கவில்லை என்றும் பெருமை கூறியது.