தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அதனை மூடுவதற்கு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஹைலைட்ஸ்
- வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது ஸ்டெர்லைட் நிறுவனம்
- இந்த ஆலையினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு
- இதை காரணம் காட்டித்தான் தமிழக அரசு ஆலையை மூடியது
தூத்துக்குடியில், வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி, அந்நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தமிழக அரசும் மனு தாக்கல் செய்திருந்தது. இன்று அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் உடல் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி அதனை மூடுவதற்கு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் கடந்த மே 22-தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச்சூடும், தடியடியும் நடத்தப்பட்டது. இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பதற்றம் காணப்பட்டது. நிலைமை தீவிரமடைந்த சூழலில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து, ஆலை மூடப்பட்டது.
மேலும் படிக்க : ஸ்டெர்லைட் குறித்து கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்கள்; ஜூட் விட்ட முதல்வர்!
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடர்ந்து. இதில் ஆலையை திறக்க அனுமதி கிடைத்தது.
இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து.
இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், “டிசம்பர் 15, 2018 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று கூறியிருத்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த விவகாரம் குறித்து வேதாந்தா குழுமம் மற்றும் தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க - "ஸ்டெர்லைட் ஆலை வழக்கால் தூத்துக்குடியில் பதற்றம்"