சீதாராம் யெச்சூரி தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
New Delhi: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் அக்டோபர் மாதம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதற்கு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எஸ்.ஏ. நசீர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பார்கள்.
வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது, சீதாராம் யெச்சூரி தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. ஜம்மு காஷ்மீரில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், தனது பெற்றோரை சந்திக்க விரும்பும் மாணவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆகியோர் காஷ்மீருக்கு செல்ல உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், 'மனுதாரரான மாணவர் முகம்மது அலீம் சயீது ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சென்று அவரது பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்படுகிறார். சந்தித்த பின்னர் பிரமாண பத்திரத்தை அவர் தாக்கல் செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கட்சி நிர்வாகியான முகம்மது யூசுப் தாரிகமியை சந்திக்க காஷ்மீர் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தொடர்ந்த வழக்கில், 'நீங்கள் (யெச்சூரி) காஷ்மீருக்கு செல்லலாம். நீங்கள் உங்களது நண்பரை மட்டும்தானே சந்திக்கப் போகிறீர்கள்? இந்திய நாட்டின் குடிமகன் தனது நண்பரை சந்திக்க செல்கிறார். இதில் என்ன இடையூறு இருக்க முடியும்? ' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், அரசியல் தலைவர் ஒருவர் காஷ்மீருக்கு செல்வது என்பது அங்கு பிரச்னையை இன்னும் தீவிரம் அடையச் செய்யும். எனவே யெச்சூரியை காஷ்மீர் செல்ல அனுமதிக்க கூடாது என்றார். இருப்பினும் யெச்சூரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் கடந்த 5-ம்தேதி சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. மேலும் துணை ராணுவத்தினர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீருக்கு செல்ல முயன்ற அரசியல் தலைவர்கள் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.