திமுக தொடர்ந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்படவுள்ளது.
New Delhi: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், வார்டுகள் சீரமைப்பு பணிகளை முடித்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக டிசம்பர் 5-ம்தேதியான வியாழன் அன்று விசாரிக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 2 கட்டங்களாக டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 6-ம்தேதி தொடங்குகிறது.
இதற்கிடையே வார்டுகள் சீரமைப்பு பணிகளை முடித்து விட்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞரான அபிஷேக் மனு சிங்வி ஆஜராகினார். இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது.
திமுக தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக 27 மற்றும் 30 தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் டிசம்பர் 6-ம்தேதி தாக்கல் செய்யப்படும் என்பதால் எந்தவித தாமதமும் இன்றி, வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை டிசம்பர் 5-ம்தேதியான வியாழன் அன்று விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.