மேல்முறையீட்டு மனு மீது வரும் திங்கட்கிழமைதான் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹைலைட்ஸ்
- சிதம்பரத்தின் மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது
- திங்கட்கிழமை வரை சிபிஐ கஸ்டடியில் இருப்பார் சிதம்பரம்
- புதன் கிழமை இரவு, சிதம்பரம் கைது செய்யப்பட்டார்
New Delhi: டெல்லி உயர் நீதிமன்றம், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கொடுக்க மறுத்ததற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முறையிட்டிருந்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீது வரும் திங்கட்கிழமைதான் விசாரணை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் கொடுக்காததை அடுத்து, சிபிஐ அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிராகத்தான் சிதம்பரம் முறையிட்டிருந்தார்.
நேற்று, சிறப்பு நீதிமன்றம், ப.சிதம்பரத்தை சிபிஐ கஸ்டடிக்கு அனுப்பியது. அவர் சிபிஐ பிடியில், விசாரணைக்காக 5 நாட்கள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
டெல்லி நீதிமன்றம், முன் ஜாமீன் கொடுக்காததைத் தொடர்ந்து, புதன் கிழமை, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் பார்த்தது சிதம்பரம் தரப்பு. ஆனால், அவரின் மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெள்ளிக்கிழமை மனு மீதான விசாரணை நடத்தப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலத்தினால்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டார் என்று தகவல் தெரிந்த வட்டாரம் NDTV-யிடம் கூறியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியாவின் தலைவர்களாக இருந்தவர்கள் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவரான பீட்டர் முகர்ஜி. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை முறைகேடாக பெறுவதில் உதவினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்திராணி முகர்ஜி, தனது மகளான ஷீனா போராவைக் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். அந்த வழக்கில்தான் தற்போது சிறையில் இருக்கிறார். இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் வழக்கில் அவர் அப்ரூவராக மாறியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
சிதம்பரம், தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். நேற்று மட்டும் சிதம்பரத்திடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை செய்துள்ளது சிபிஐ தரப்பு.