இது தொடர்பான வழக்கை கேரளாவில் நடத்தலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
ஹைலைட்ஸ்
- மத்திய அரசு, வழக்கை முடித்துவைக்குமாறு கேட்டுள்ளது
- மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இந்த வழக்கை விசாரிக்கிறார்
New Delhi: 2012 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த 2 மீனவர்களை, இத்தாலி நாட்டின் கடற்படையினர் இருவர் சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்படும் வழக்கில், உச்ச நீதிமன்றம் கறார் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இத்தாலி நாடு, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுத்தால் மட்டுமே வழக்கு முடித்தவைக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது குறித்த உத்தரவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்ஏ பாப்டே தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு தரப்பு, ‘இத்தாலி, மீனவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுக்க ஒப்புக் கொண்டது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இத்தாலி கடற்படையினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்' என்றது.
அதே நேரத்தில் தலைமை நீதிபதி, “பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கான இழப்பீடு தொகை கொடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களை முதலில் நீதிமன்றத்துக்கு அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச நிரந்தர நடுவர் நீதிமன்றம், ‘இத்தாலி கடற்படையினர் மீதான வழக்குகளை இந்திய நீதிமன்றத்தில் விசாரிக்க அதிகாரம் கிடையாது' என்று தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் ஐ.நா சபையின் தீர்ப்பாயம், “இந்த வழக்கில் உயிர்ச் சேதம், பொருட் சேதம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதனால், இந்தியாவுக்கு இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது.
இப்படிப்பட சூழலில்தான் உச்ச நீதிம்ன்றம், இத்தாலி கடற்படையினர் மீதான வழக்குகளை முடித்து வைக்கும் முன்னர், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தின் கருத்துகளை கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, ‘இத்தாலி, குற்றம் சாட்டப்பட்டுள்ள கடற்படையினர் மீது கிரிமினல் வழக்கு நடத்தப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகபட்ச இழப்பீடு கொடுக்கப்படும் என்றும் கடிதம் மூலமாக உறுதியளித்திருக்கிறது' என்றார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு, பிப்ரவரி 15 ஆம் தேதி, கேரளாவைச் சேர்ந்த ஆயுதம் வைத்தில்லாத இரண்டு மீனவர்களை, இத்தாலியின் இரு கடற்படையினர் சுட்டுக் கொன்றனர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கேரள கடற்கரைக்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பான வழக்கை கேரளாவில் நடத்தலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இத்தாலியின் கடற்படையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.