வங்கியில் பெண் ஊழியரை தாக்கிய காவலர்; நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிர்மலா சீதாராமன்
ஹைலைட்ஸ்
- வங்கியில் பெண் ஊழியரை தாக்கிய காவலர்!
- நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிர்மலா சீதாராமன்!
- #ShameSuratPolice என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரல்
New Delhi: குஜராத்தின் சூரத்தில் உள்ள கனரா வங்கியில் பெண் ஊழியர் ஒருவரை காவர் தாக்கியதையடுத்து, வங்கி ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சூரத் நகர காவல் ஆணையர் ஆர்.பி.பிரம்பாத்திடம் இந்த விவகாரம் குறித்து பேசியதை தொடர்ந்து, அந்த காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, கனரா வங்கியின் சரோலி கிளைக்கு காவல் ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டதாகவும், அங்கு ஊழியர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக ஊழியர்களுக்கு உறுதியளித்தாகவும் எனது அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான சிறிய வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகியது, அதில், சீருடையில் அல்லாத காவலர் ஒருவர், கனரா வங்கியில் உள்ள பெண் பணியாளரை தாக்குகிறார். இதைத் தொடர்ந்து #ShameSuratPolice என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலாக தொடங்கியது.
இந்த விவகாரத்தை தொடர்ந்து பின்பற்றுவதாக கூறிய நிர்மலா சீதாராமன், வங்கிகளில் உள்ள அனைத்து ஊழியர்களின் பாதுகாப்பும் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன். கடும் சவால்களுக்கு மத்தியில், வங்கிகள் அனைத்து சேவைகளையும் நம் மக்களுக்கு விரிவுபடுத்தி வருகின்றன. அப்படி இருக்க அவர்களின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக சூரத் மாவட்ட ஆட்சியர் தவால் படேலுடன் பேசியதாகவும், தற்போது அவர் விடுப்பில் இருந்தாலும், நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எனக்கு உறுதியளித்தார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நிர்மலா சீதாராமன் தனது ட்வீட்டர் பதிவில், "எனது அலுவலக தரப்பில் காவல் ஆணையரிடம் பேசியதாகவும், இதையடுத்து, ஆணையரே சம்மந்தப்பட்ட வங்கி கிளைக்குச் சென்று ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வார் என்று அவர் எங்களுக்கு உறுதியளித்துள்ளார். மேலும், குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிள உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.