This Article is From Sep 21, 2018

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாள்’ விவகாரம்; விமர்சனங்களுக்கு முட்டுக் கொடுக்கும் மத்திய அரசு!

அதையொட்டி நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு, யூஜிசி அமைப்பு மூலம், நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

‘சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாள்’ விவகாரம்; விமர்சனங்களுக்கு முட்டுக் கொடுக்கும் மத்திய அரசு!

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாளன்று என்சிசி-யை பரேட் நடத்த கேட்டுள்ளது யூஜிசி

ஹைலைட்ஸ்

  • சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைவு கூற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை
  • பிரதமர் மோடியைத் தூக்கிப் பிடிக்கவே சுற்றறிக்கை, எதிர்கட்சிகள்
  • நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல, மத்தி அரசு
New Delhi:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. அதையொட்டி நாட்டில் உள்ள கல்லூரிகளுக்கு, யூஜிசி அமைப்பு மூலம், நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதற்கு எதிர்கட்சிகளிடமிருந்து பலத்த விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ளது மத்திய அரசு.

இந்த விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கல்வித் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘எந்தக் கல்வி நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டாயப்படுத்தும் விதத்தில் நடவடிக்கையை நாங்கள் எடுக்கவில்லை. பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நினைவு கூற சிபாரிசு செய்யப்பட்டது. அதனாலேயே நிகழ்ச்சி நடத்த கோரினோம்.

எனவே வரும் 29 ஆம் தேதி, கல்லூரிகள் விருப்பப்பட்டால் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியை வைத்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் எப்படி நடத்தப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தலாம். எப்படி ராணுவம் நாட்டைக் காப்பாற்றுகிறது என்பது குறித்து விளக்கலாம் என்று மட்டும் தான் தெரிவித்துள்ளோம்.

இது ஒன்றும் அரசியல் பிரசாரம் அல்ல. இது ஒன்றும் பாஜக பேரணி அல்ல. சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து நினைவு கூற இது தான் சிறந்த வழி’ என்று விளக்கம் அளித்தார்.

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவத்துள்ளது.

மேற்கு வங்க கல்வித் துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, ‘இது பாஜக-வின் அஜெண்டாவை விளக்கும் நிகழ்ச்சியாக மாற்றப்படும். எங்கள் மாநிலத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் இந்த நாளைக் கொண்டாடாது. தேர்தலுக்கு முன்னர் தங்களது அஜெண்டாவை பாஜக முன்னிறுத்தப் பார்க்கிறது. அரசியல் பிரசாரத்துக்கு யூஜிசி-யைப் பயன்படுத்துவது வெட்கக் கேடானது’ என்று கொதித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கபில் சிபில், ‘இது அரசியல் ரீதியான காய் நகர்த்தல். பிரதமர் மோடியின் பிம்பத்தை உயர்த்திப் பிடிப்பதற்கே இப்படிப்பட்ட நிகழ்ச்சி நடத்த கல்வி நிறுவனங்கள் பணிக்கப்பட்டுள்ளது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று சுற்றறிக்கை குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த 2016, செப்டம்பர் 29 அன்று இந்திய ராணுவம், பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் தங்கி இருந்த இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தியது. உரி பகுதியில் இந்திய ராணுவத்தின் இடத்தின் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. இந்தியாவுக்குள் ஊடுருவ இருந்த தீவிரவாதிகள் பலரை இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் கொல்லப்பட்டதாக ராணுவத் தரப்பில் சொல்லப்பட்டது.

பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள், சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து பல பொதுக் கூட்டங்களில் பெருமையுடன் பேசினர். தங்களது வலிமையான ஆட்சி நிர்வாகத்தினால் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று தொடர்ந்து கூறி வந்தனர் பாஜக தலைவர்கள்.

ஆனால் காங்கிரஸோ, இதைப் போன்ற பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் முன்னரும் நடத்தப்பட்டிருக்கிறது என்றும், அது குறித்து வெளியே தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியது. பாஜக தான் அரசியல் ஆதாயங்களுக்காக வெளிப்படையாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து தெரிவித்தது என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

.