வங்கதேச படகு இந்திய மீனவரை மீட்டுள்ளது.
Kolkata: மேற்கு வங்கம் அருகே மழையால் மீன்பிடி படகு ஒன்று கடலில் கவிழ்ந்தது. அதில் இருந்த 14 பேர் உயிரிழக்க மீனவர் ரவிந்திரநாத் தாஸ் மட்டும் மூங்கில் கம்பை பிடித்துக் கொண்டு கடலில் மிதந்து கொண்டிருந்தார். அவரை வங்கதேச கடற்படையினர் மீட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் நாராயண்பூரை சேர்ந்தவர் ரவிந்திரநாத் தாஸ். அவர் சக மீனவர்களுடன் ஜூலை 4-ம்தேதி வங்கக் கடலில் மீன் பிடிக்கச் சென்றார்.
ஜூலை 6-ம்தேதி மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனை தாக்குப்பிடிக்க முடியாமல் படகு கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது. தாஸ் உள்பட இருந்த மொத்தம் 15 பேரில் 3 பேர் படகுடன் சேர்ந்து தண்ணீருக்குள் சென்று விட்டனர்.
மற்றவர்கள் கடலில் குதித்து நீந்தத் தொடங்கினர். கையில் கிடைத்தவற்றைக் கொண்டு நீந்தியவாரே தங்களது உயிரை அவர்கள் காப்பாற்றத் தொடங்கினர். அப்போது தாஸின் கையில் மூங்கில் கம்பு ஒன்று கிடைத்தது. அதனைப் பிடித்துக் கொண்டு அவர் நீச்சல் அடிக்கத் தொடங்கினார்.
ஓரிரு நாட்கள் தாக்குப்பிடித்த மற்றவர்கள் கடும் சோர்வு காரணமாக கடலுக்குள் மூழ்கி உயிரை விட்டனர். தாஸ் மட்டும் மன வலிமையால் மூங்கில் கம்பை பிடித்துக் கொண்டு நீந்திக் கொண்டே இருந்தார்.
கடைசியாக அவர் ஜூலை 10-ம்தேதி வங்கதேச கடற்படையின் கண்ணில் பட்டார். இதையடுத்து சிறிய கப்பலை கொண்டு வந்த அவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்த ரவிந்திரநாத் தாசை மீட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் தாஸின் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்து விட்டார்.