இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலா சுமார் மூன்றரை மணி நேரம் மறைத்துவிடுகிறது
ஹைலைட்ஸ்
- மதியம் 1.32 க்கு தொடங்கி, மாலை 5.02 மணி வரை தென்படுகிறது
- நிலா சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது பூமி இருளை சந்திக்கும்
- நீங்கள் எப்போதும் போல உங்கள் அன்றான வேலைகளை, உணவு பழக்கத்தை தொடரலாம்
2018 ஆம் ஆண்டு நிச்சயம் சிறப்பான ஆண்டாகவே கருதப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு நாளை வரக்கூடிய சூரிய கிரகணத்தை காண வானிலை ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதியன்று ஏற்பட்ட சூரிய கிரகணத்தை பூமியில் வடக்கு பகுதியில் உள்ள நாடுகளால் மட்டுமே பார்க்க முடிந்தது. வடக்கு கனடா, வடகிழக்கு ஐக்கிய நாடுகள், க்ரீன்லாண்டு, சைபீரியா, தென் கொரியா மற்றும் சீனா ஆகிய பகுதிகளில் காணப்பட்டதே தவிர இந்தியாவில் காண முடியவில்லை.
சூரிய கிரகண நேரம்:
இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலா சுமார் மூன்றரை மணி நேரம் மறைத்துவிடுகிறது. மேலும் இந்திய நேரத்தின்படி மதியம் 1.32 க்கு தொடங்கி, மாலை 5.02 மணி வரை தென்படுகிறது.
சூரிய கிரகணம் குறித்த கட்டுக்கதை:
ஆண்டாண்டு காலமாக சூரிய கிரகணம் குறித்து சில மூடநம்பிக்கைகளும் கட்டுக்கதைகளும் நம்மை சுழன்று கொண்டே தான் இருக்கிறது. அதில் முக்கியமானது, சூரிய கிரகணத்தின் போது உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது தான். சமைப்பது, காய்கறி நறுக்குவது போன்றவற்றை செய்யக்கூடாது போன்ற மூடநம்பிக்கைகள் இன்னும் பெரும்பான்மை மக்கள் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
உணவு கட்டுப்பாடு தேவையில்லை:
சூரிய கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்களில் நச்சு இருப்பதால் உணவு பொருட்களிலும் நஞ்சு பரவி விடும் என்பது முற்றிலும் அபத்தமான விஷயம் என்று நாசா தகவல் அளித்துள்ளது. சில வருடங்களுக்கு முன் மக்களுக்கு சூரிய கிரகணம் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. நிலா சூரியனை முழுவதுமாக மறைக்கும்போது பூமி இருளை சந்திக்கும் என்பதால் அதனை அபசகுணமாக கருதினர். இப்படியான மூட நம்பிக்கைகள் தான் நாளடைவில் வெவ்வேறு விதமாக உருவெடுத்து விட்டது. இப்படியான விஷயங்களை கடந்து வருவது மிகவும் அவசியமானது. சூரிய கிரகணத்தின் போது நீங்கள் எப்போதும் போல உங்கள் அன்றான வேலைகளை, உணவு பழக்கத்தை தொடரலாம்.