This Article is From Jun 16, 2020

சுஷாந்த்தின் மறைவை அடுத்து ‘பாலிவுட் Privilege Club’ஐ வறுத்தெடுக்கும் பிரபலங்கள்- பின்னணி என்ன?

அந்த நபர்கள் யாரென்று வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று பலர் கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

சுஷாந்த்தின் மறைவை அடுத்து ‘பாலிவுட் Privilege Club’ஐ வறுத்தெடுக்கும் பிரபலங்கள்- பின்னணி என்ன?

இயக்குநர் அனுபவ் சின்கா, ‘பாலிவுட் பிரிவிலேஜ் கிளப், இன்றைக்கு உட்கார்ந்து நன்றாக யோசிக்க வேண்டும். இது குறித்து என்னிடம் மேலும் எதையும் கேட்காதீர்கள்,’ என்று சூசகமான ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார். 

ஹைலைட்ஸ்

  • அனுபவ் சின்கா, நிகில் திவேதி சூசகப் பதிவு
  • பாலிவுட்டில் சிலரை அவர்கள் விமர்சித்துள்ளனர்
  • ராஜ்புத்துக்கு 34 வயதானது
New Delhi:

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று சொல்கிறது மும்பை போலீஸ். அவரின் மறைவைத் தொடர்ந்து ஒரு பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலிவுட்டில் இருக்கும் ஒரு தரப்பு பிரபலங்கள், அவரையும் அவரின் சினிமாக்களையும் பெருமளவு மதிக்கவில்லை என்பதுதான் சர்ச்சை வெடிப்பதற்கான குற்றச்சாட்டு. இப்படி குற்றம் சாட்டியவர்கள் சாதாரண ரசிகர்கள் அல்ல. பாலிவுட் திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குநர்களும் பிரபலங்களும். 

சுஷாந்த் இறந்ததைத் தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்கள் பலர், அவருக்கு அஞ்சலி செலுத்தி தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகள் இட்டனர். அதில் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கரண் ஜோகர் மற்றும் பிரபல முன்னணி நடிகை ஆலியா பட் ஆகியோரும் அடங்குவர். இவர்கள் இருவர்தான் தற்போது சுஷாந்த் மரணத்தைத் தொடர்ந்து, நெட்டிசன்களால் வறுத்தெடுக்கப்படும் நபர்களாக உள்ளனர்.

காரணம், கரண் ஜோகர், ‘Koffee With Karan' என்கிற பிரபல டிவி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருப்பவர். இந்த நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட சாரரே அழைக்கப்பட்டனர் என்றும், பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்த சுஷாந்த் அழைக்கப்படவில்லை என்பதும் குற்றச்சாட்டு. அதேபோல ‘காஃபி வித் கரண்' ஷோவில் ஒரு முறை பங்கேற்ற ஆலியாவிடம் சுஷாந்த் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் வேடிக்கையாக, ‘சுஷாந்த் சிங் ராஜ்புத் என்றால் யார்?' என்றார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் இயக்குநர் நிகில் திவேதி, ‘சில நேரங்களில் நம் திரைப்பட உலகின் இந்த போலித்தனம் என்னை கோபமடையச் செய்கிறது. சுஷாந்திடம் தொடர்பில் இருக்க வேண்டும் என்று இப்போது பதிவிடுகிறார்கள். நீங்கள் அவரிடம் தொடர்பிலேயே இல்லை. காரணம், அவரின் பாலிவுட் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. எனவே வாயைப் பொத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இம்ரான் கான், அபே தியோல் போன்றவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்களா? இல்லை! ஆனால், அவர்கள் பாலிவுட்டில் பிரபலமாக இருந்தபோது தொடர்பில் இருந்தீர்கள் அல்லவா?' என்று கொதிப்புடன் பதிவிட்டுள்ளார். திவேதியின் பதிவு யாரைக் குறிப்பிடுகிறது என்று நேரடியாக தெரியவில்லை என்றாலும், அது கரண் ஜோகரை சுட்டுவதாக யூகிக்க முடிகிறது.

அதேபோல இயக்குநர் அனுபவ் சின்கா, ‘பாலிவுட் பிரிவிலேஜ் கிளப், இன்றைக்கு உட்கார்ந்து நன்றாக யோசிக்க வேண்டும். இது குறித்து என்னிடம் மேலும் எதையும் கேட்காதீர்கள்,' என்று சூசகமான ட்வீட்டைப் பதிவிட்டுள்ளார். 

அதேபோல பாலிவுட் பிரபலம் ரன்விர் ஷோரி, ‘கேட்கீப்பர்ஸ் ஆஃப் பாலிவுட்' என்கிற ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தியுள்ளார். 

ஷேகர் கபூரும் தன் பங்கிற்கு சிலரை சூசகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். 

இந்தப் பதிவுகளுக்குக் கீழ், அந்த நபர்கள் யாரென்று வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்று பலர் கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

(If you need support or know someone who does, please reach out to your nearest mental health specialist.) Helplines: AASRA: 91-22-27546669 (24 hours) Sneha Foundation: 91-44-24640050 (24 hours) Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours) iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm) Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

.