சுஷ்மா மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
ஹைலைட்ஸ்
- மாரடைப்பு காரணமாக சுஷ்மா காலமானார்
- முழு அரசு மரியாதையுடன் அவர் தகனம் செய்யப்பட்டார்
- பல அரசியல் தலைவர்களும் அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்
New Delhi: முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் இருந்தனர்.
67 வயதான சுஷ்மா ஸ்வராஜுக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜந்தர் மந்தரில் உள்ள இல்லத்திற்கு சென்று சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சுஷ்மாவின் கணவர் கவுசல், மகள் பாசுரிக்கு பிரதமர் ஆறுதல் தெரிவித்தார். துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவும் அஞ்சலி செலுத்தினார். பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் நேற்று இரவு உயிரிழந்தார். பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய ஆட்சியில் அவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர்.
இளம் வயதிலேயே அமைச்சரான பெண் என்ற பெருமைக்குரியவர், அதுமட்டுமில்லாமல் டெல்லியில் முதலமைச்சராக பதவி வகித்தவர். அதைபோன்று பாஜகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார். சட்ட துறையில் பட்டம் பயின்று இருக்கிறார். சமூக வலைத்தளங்கள் வாயிலாக மக்களுடைய கோரிக்கைகளுக்கு உடனடியாக பதிலளித்ததின் காரணமாக மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.
வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற மக்கள் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்றியிருந்தார்.
வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் தன்னுடைய ட்விட்டரில் தீவிரமாக செயல்பட்டவர். பல்வேறு விவகாரங்கள் குறித்து அவ்வவ்போது ட்விட்டரில் கருத்துக்களையும், செய்திகளையும் பதிவிட்டு வந்தவர்.
சுஷ்மா வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட பல்வேறு இந்தியர்களை மீட்டு தாயகம் கொண்டு வந்தவர்.
குறிப்பாக சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 46 இந்திய செவிலியர்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை மேற்கொண்டார். வளைகுடா நாடுகளில் கொத்தடிமைகளாக இருந்த இந்தியர்கள் மீட்பு, நைஜீரியாவில் சிக்கிய இந்திய மாலுமிகள் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை துரிதமாக செய்துமுடித்தார் சுஷ்மா.
டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து ராகுல் காந்தியும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி அஞ்சலி செலுத்தினர்.
பாஜக எம்.பிக்கள் அனுராக் தாகூர், பாபுல் சுப்ரியோ, மனோஜ் திவாரி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை சுஷ்மாவின் உடல் பாஜக அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.