This Article is From Sep 28, 2019

Sushma Swaraj-ன் கடைசி வாக்குறுதியை நிறைவேற்றிய மகள் - நெகிழவைக்கும் சம்பவம்!

குல்பூஷன் ஜாதவ் (Kulbhushan Jadhav) விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றபோது, நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் Sushma Swaraj .

Sushma Swaraj-ன் கடைசி வாக்குறுதியை நிறைவேற்றிய மகள் - நெகிழவைக்கும் சம்பவம்!

மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுக்கு (Harish Salve) ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார் Sushma Swaraj

New Delhi:

முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் (Sushma Swaraj), நெஞ்சு வலி ஏற்பட்டு இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வேவுக்கு (Harish Salve) ஒரு வாக்குறுதியைக் கொடுத்தார். பாகிஸ்தான் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவின் வழக்கில், சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வாதாடியவர் சால்வே. அவர் வழக்கில் திறம்பட வாதாடியதைப் பாராட்டிய சுஷ்மா, ‘உங்களுக்குத் தர வேண்டிய 1 ரூபாய் பணத்தை வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்று அன்புக் கட்டளையிட்டார். 

இந்தத் தகவலை சொன்ன ஒரு சில மணி நேரங்களில் சுஷ்மாவின் உயிர் பிரிந்துவிட்டது. ஆனால், தனது தாயின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சுஷ்மாவின் மகளான பன்சூரி சுவராஜ், வழக்கறிஞர் சால்வேவை சந்தித்து, அந்த 1 ரூபாய் சம்பளப் பணத்தை வழங்கினார். இது குறித்தப் பதிவையும், புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார் சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கவுஷால். 
 

குல்பூஷன் ஜாதவ் விவகாரம் சர்வதேச கவனத்தைப் பெற்றபோது, நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் சுஷ்மா. ஜாதவ் வழக்கில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி, இந்தியாவுக்குச் சாதகமான தீர்ப்பு வந்தது. அப்போதுதான் வழக்கறிஞர் சால்வேவை பாராட்டியுள்ளார் சுஷ்மா. இருவருக்கும் இடையில் போன் மூலம் நடந்த தகவல் பறிமாற்றத்தை, சுஷ்மாவின் இறப்புக்குப் பின்னர் வருத்தத்துடன் வெளியிட்டார் சால்வே. 

சுஷ்மா இறந்த பின்னர் அவரைப் பற்றி NDTV-யிடம் பகிர்ந்து கொண்ட சால்வே, “நான் போன் மூலம் பேசியபோது கூட அவர் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார். ஆனால் நான் பேசி முடித்த 10 நிமிடத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவர் இல்லாதது இந்திய அரசியலில் மிகப் பெரிய வெற்றிடமாகும். மற்றவர்களைக் காயப்படுத்தாமல் தனது கருத்துகளைச் சொல்லக் கூடியவர் சுஷ்மா. மிகவும் தீர்க்கமுடன் பேசுவார், ஆனால் கோப்பட மாட்டார்” என்று உருக்கமாக தெரிவித்தார். 

சுஷ்மா சுவராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கடைசியாக பகிர்ந்தது, குல்பூஷன் ஜாதவின் குடும்பத்துடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத்தான். 

.