This Article is From Apr 02, 2019

நெருங்கும் தேர்தல்; பறக்கும் மது, பணம்; இதுவரை பறிமுதலான பொருட்களின் மதிப்பு என்ன தெரியுமா?

7 கட்டங்களாக நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பிக்கும்.

நெருங்கும் தேர்தல்; பறக்கும் மது, பணம்; இதுவரை பறிமுதலான பொருட்களின் மதிப்பு என்ன தெரியுமா?

தேர்தல் முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்படும். 

New Delhi:

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டதில் இருந்து இதுவரை 1,460 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், மது மற்றும் போதைப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 

அப்படி முறைகேடான பொருட்கள்  கைப்பற்றப்பட்டதில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில் அம்மாநிலத்தில் 100 கிலோ மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு மட்டும் 500 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவரை குஜராத்தில் 509 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அடுத்த இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 208.55 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலும் ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தொகையே அதிகம் எனப்படுகிறது. 

தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவில் 158.61 கோடி ரூபாய் மதிப்பிலும், பஞ்சாபில் 144.39 கோடி ரூபாய் மதிப்பிலும், உத்தர பிரதேசத்தில் 135.13 கோடி ரூபாய் மதிப்பிலும் முறைகேடான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 1 ஆம் தேதி வரை இந்திய அளவில் 1460.02 கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், 340.78 கோடி ரூபாய் பணமும், 143.84 கோடி ரூபாய் மதிப்பிலான மதுவும், 692.64 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களும், 255.93 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த உலோகங்களும், 26.84 கோடி ரூபாய் மதிப்பிலான மற்றப் பொருட்களும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், தேர்தல் ஆணையம் நாட்டின் பல்வேறு இடங்களில் பறக்கும் படை, கண்காணிக்கும் படை என்று பல்வேறு குழுக்களை பணியில் அமர்த்தியுள்ளன. 

7 கட்டங்களாக நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி ஆரம்பிக்கும். தேர்தல் முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்படும். 


 

.