கோயிலில் வேலை செய்த இருவர் கூறிய பதிலில் கிராமவாசிகளுக்கு நம்பிக்கை வரவில்லை (கோப்புப் படம்)
Kancheepuram: காஞ்சிபுரத்தில் இருக்கும் பழமையான கோயில் ஒன்றில் பராமரிப்பு வேலை செய்ய வந்ததாக கூறி புதையல் வேட்டையில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
காஞ்சிபுரம், புலாலூரில் இருக்கும் மிகப் பழமையான கோயிலில் துணியைப் போர்த்தி இருவர் வேலை செய்து வந்துள்ளனர். இது குறித்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் விசாரித்துள்ளனர். இருவரும், தாங்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வந்துள்ளோம் என்று பதிலளித்து உள்ளனர். அவர்கள் பதிலில் உண்மை இல்லையென்று சந்தேகப்பட்ட கிராமவாசிகள் உள்ளூர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து, காவல் துறை இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பு, ‘கிராமவாசிகளுக்கு கோயிலில் பராமரிப்புப் பணி நடக்கப் போவது குறித்து முன்னரே எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதனால், அவர்கள் வேலை செய்ய வந்தவர்கள் மீது சந்தேகப்பட்டு புகார் அளித்துள்ளனர். பராமரிப்புப் பணி என்ற பேரில் அவர்கள் புதையல் வேட்டையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கிராம மக்கள் சந்தேகப்படுகின்றனர். இது குறித்து போலீஸ் விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வரும்’ என்று தகவல் தெரிவித்துள்ளது.