This Article is From Jun 29, 2018

பணியிடமாற்றம் கோரி கூச்சலிட்ட ஆசிரியர்… கைது செய்யச் சொன்ன உத்தரகாண்ட் முதல்வர்!

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், பணியிட மாற்றம் கோரி கூச்சலிட்டுள்ளார்

ஹைலைட்ஸ்

  • உத்தரகாண்ட் முதல்வர் பங்கேற்ற ஜனதா தர்பார் நிகழ்ச்சியில் இது நடந்தது
  • கணவர் இறந்ததை அடுத்து, ஆசிரியர் பணியிடமாற்றம் கோரியுள்ளார்
  • கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டார்
New Delhi:

உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், பணியிட மாற்றம் கோரி கூச்சலிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த முதல்வர், கூச்சலிட்ட பெண் ஆசிரியரை கைது செய்யச் சொல்லி உத்தரவிட்டார்.

கூச்சலிட்ட பெண் ஆசிரியரின் பெயர் பஹுகுனா. 57 வயதாகும் இவர், கடந்த 25 ஆண்டுகளாக உத்தரகாண்டில் இருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு அவரின் கணவர் இறந்துவிட்டார். இதனால், தனது குழந்தைகளுடன் இருக்க விருப்பப்பட்டு, டேராடூனுக்கு பணிமாறுதல் கேட்டுள்ளார். அரசு தரப்பு இதை சரியாக கண்டுகொள்ளவில்லை என்பதை அடுத்து, மாநில முதல்வரின் குறை கேட்பு கூட்டமான ‘ஜனதா தர்பார்’-க்கு சென்றுள்ளார். 

அங்கும் அவர் முதல்வரிடம், பணிமாறுதல் குறித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் அவரின் கோரிக்கையை மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்துதான் அவர் கூச்சலிட்டாராம். 

பஹுகுனா முதல்வரைப் பார்த்து கூச்சலிடும் காட்சிகள் வீடியோவாக பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் கோபமடையும் முதல்வர், ‘அவரை கைது செய்யுங்கள். இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள்’ என்று போலீஸுக்கு உத்தரவிடுகிறார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
 

uttarakhand teacher

மாலை, பஹுகுனா பிணையில் விடுவிக்கப்பட்டார். 

இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் பஹுகுணா, ‘எனது கணவர் 2015 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். எனது குழத்தைகள் டேராடூனில் இருக்கிறார்கள். எனது குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு என்னால் பணிக்குச செல்ல முடியாது. 25 ஆண்டுகளாக நான் ஒரு கிராமப்புறப் பகுதியில் வேலை செய்து வருகிறேன். இந்நிலையில் தான், நான் முதல்வரிடம் பணியிட மாற்றம் குறித்து தெரிவித்தேன். அவர் கோரிக்கையைக் கேட்ட பின்னர் எதுவும் செய்யவில்லை. அதற்கு, ஏன் என்று கேள்வி கேட்டேன். உடனே அவர் குரலை உயர்த்தி, ‘நீங்கள் ஒரு ஆசிரியர். அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறினார்’ என்றார். 

இந்த விவகாரம் குறித்து உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், ‘இந்த விஷயத்தை கொஞ்சம் உணர்வுபூர்வமாக அணுகி, ஆசிரியருக்கு பணி மாறுதல் கொடுங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

.