This Article is From Mar 25, 2020

சென்னையில் டீ கடைகளை மூட உத்தரவு: உணவு டெலிவரிக்கும் தடை!

பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ரேஷன் பொருட்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே வீட்டிற்கு வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement
தமிழ்நாடு Edited by

இன்று மாலை 6 மணியுடன் டீக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது

Highlights

  • சென்னையில் டீ கடைகளை மூட உத்தரவு
  • நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு
  • சமைத்த உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது

சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்தடுத்த உத்தரவுகளைச் சென்னை மாநகராட்சி பிறப்பித்து வருகிறது. அதன்படி டீ கடைகளைத் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உணவுப்பொருட்களை டெலிவரி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 11 பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்றிரவு 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2 நாட்களாக நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டைக் காக்க நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டுமொத்த இந்தியாவே முடக்கப்படவுள்ளது.

Advertisement

ஒவ்வொரு மாநிலமும், யூனியன் பிரதேசங்களும் முடக்கப்பட்டிருக்கும். கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்றால் இந்த கடுமையான நடவடிக்கை மிக அவசியம். அடுத்து வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்கும். இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி அளவிலே தமிழக அரசு அறிவித்த 144 தடை சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளும் முடக்கப்படுகின்றன. பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சிகள் செயல்படும் பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கு அனுமதி உள்ளது.

Advertisement

மருந்து உற்பத்தி, விநியோகம், மருந்து உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட அனுமதி. அலுவலகம் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி. விமான நிலையம், மருத்துவமனை செல்லும் டாக்சி, இறுதிச்சடங்கு வாகனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி உணவகங்கள் இயங்கும் ஆனால், பொதுமக்கள் உணவகத்திலிருந்து சாப்பிட அனுமதியில்லை. பார்ச்சல் செய்து கொடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆன்லைன் உணவு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

Advertisement

இந்நிலையில், இன்று மூன்று முக்கிய அறிவிப்புகளைச் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், டீக்கடைகளில் கும்பலாக நின்று டீ அருந்தும் பழக்கம் உள்ளதால் இன்று மாலை 6 மணியுடன் டீக்கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்து வரும் 21 நாட்களுக்கு டீக்கடைகள் திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது சமைத்த உணவுப்பொருட்களை டோர் டெலிவரி செய்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, ஜொமேட்டோ நிறுவனங்கள் உணவுப் பொருட்களை டெலிவரி செய்யவும் தடை விதிக்கப்படுகிறது.

Advertisement

பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ரேஷன் பொருட்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே வீட்டிற்கு வழங்க அனுமதி வழங்கப்படுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, தனியார் நிறுவனங்களோ, சமூக ஆர்வலர்களோ சமைத்து உணவு வழங்க மாநகராட்சி ஆணையர் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement