திரைப்பட இயக்குநரும், லட்சிய திமுக கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர் இன்று சென்னை மாநகர கமிஷனரை சந்தித்து ஒரு பரபரப்புப் புகாரை கொடுத்துள்ளார்.
கமிஷனருடனான சந்திப்புக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த டி.ஆர், என்ன பிரச்னைக்காக காவல் துறையை நாடியுள்ளார் என்பது குறித்து விளக்கினார். ‘2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மன்மதன்'. எனது மகன் சிம்பு, அந்தப் படத்திற்குக் கதை எழுதினான். அவனது மேற்பார்வையில்தான் மொத்தப் படமும் உருவானது. படம் வெளியாகி பெரும் வசூலை ஈட்டியது. மன்மதன் படத்தையும், அடுத்து வந்த ‘வல்லவன்' படத்தையும் தயாரித்தது தேனப்பன்.
இரண்டு படங்களின் உரிமையும் எங்களிடம்தான் உள்ளது. அந்தப் படத்தை வேறு மொழிகளில் டப் செய்யவோ, ரீமேக் செய்யவோ நினைத்தால் எங்களிடம் கேட்காமல் அதைச் செய்ய முடியாது. அதற்கு உரிய ஆவணங்கள் எங்களிடத்தில்தான் உள்ளது.
மன்மதன் படத்தை, டப் செய்ய பலர் கேட்டிருந்த போதும், சிம்புவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அதை யாருக்கும் கொடுக்காமல் வைத்திருந்தோம். சிம்பு தமிழ் சினிமாவில் நன்றாக வளர்ந்துவிட்டதால், அதை ரீமேக் செய்யும் எண்ணம் தள்ளிப் போனது.
இந்நிலையில்தான், படத்தை டப் செய்துகொள்ள சிலரிடம் பேசி வந்தோம். ஆனால், படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன், இதற்கு தொடர்ந்து முடக்குப் போட்டு வருகிறார். இது குறித்துத்தான் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம். நாங்கள் அனைத்தையும் சட்ட ரீதியாக அணுக உள்ளோம்' என்று முடித்துக் கொண்டார்.